Downside Up TV

வணக்கம் நண்பர்களே 🙏


இயற்கை வைத்தியம் (Nature Cure)

உணவு

பண்டைக் கிரேக்க நாட்டில் ஈஸ்குலேப்பியஸ் (Aesculapius) என்னும் மருத்துவர் இருந்தார்.

அந்தக் காலத்தில், இப்போது மாதிரித் தீராத நோய்கள் அவ்வளவாகக் கிடையாது. ஆகையால் தன்னிடம் வரும் நோயாளிகளையெல்லாம் அவர் பெரும்பாலும் குணப்படுத்தி அனுப்ப முடிந்தது. அதனால் மக்கள் அவரை ஒரு தெய்வம் போலவே கருதினார்கள். அவர் இறந்த பிறகு, கிரேக்கர்கள் அவருக்காக ஒரு கோயில் எழுப்பினார்கள். அந்தக் கோயிலில் பூஜை வைத்துக் கொண்டிருந்தார் ஒரு பூசாரி.

கிறிஸ்து பிறப்பதற்கு 460 ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பூசாரிக்கு ஒரு மகன் பிறந்தான். ஹிப்போக்ரேட்டஸ் (Hippocreates) என்று அவனுக்குப் பெயரிட்டார்கள். அவன்தான் இன்றைய மேனாட்டு மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என்று போற்றப்படுகிறவன். ஆனால், அவனை இயற்கை மருத்துவத்தின் தந்தை எனப் போற்றுவதே இன்னும் பொருத்தமாய் இருக்கும். ஏனென்றால், இருமல், காய்ச்சல், வலி இவையெல்லாம் உண்மையில் வியாதிகள், அல்ல - வியாதிகளைப் போக்குவதற்காக உடம்பில் ஏற்படும் நிகழ்ச்சிகள் என்று முதலில் கூறியவர் ஹிப்போக்ரேட்டஸ் தான்.

எளிய உணவு, தூய காற்று, அளவான உடற்பயிற்சி இவைதாம் ஆரோக்கிய வாழ்வை அளிக்கக் கூடியவை என்று முதன் முதலில் கூறியவரும் அவரே தான். ஆனால் இவற்றையெல்லாம்விட முக்கியமான இன்னொரு சிறப்பான அறிவுரையையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

'உணவே உன்னுடைய மருந்தாக இருக்கட்டும்; மருந்தே உன்னுடைய உணவாக இருக்கட்டும்!' இதுதான் அந்த அறிவுரை. இயற்கை வைத்தியத்தின் அடிப்படைக் கொள்கையும் இதுவேதான்! இந்தக் கொள்கையை நூற்றுக்கு நூறு கடைப்பிடிப் பவன்தான் உண்மையான இயற்கை வைத்தியன்!

ஹிப்போகிரேட்டஸ் வகுத்துக் கொடுத்த இந்த அடிப்படைக் கொள்கையை நூற்றுக்கு நூறு புறக்கணிக்கிறவர்கள் அல்லோபதி டாக்டர்கள். அவர்கள் தங்களுடைய மருத்துவக் கலையின் தந்தை என்பதாக ஹிப்போகிரேட்டஸ் மீது உரிமை கொண்டாடுவது, வெறும் கேலிக்கூத்தே தவிர வேறு அல்ல?

'உணவே உன்னுடைய மருந்தாக இருக்கட்டும்; மருந்தே உன்னுடைய உணவாக இருக்கட்டும், (Let food be the medicine and let medicine be the food) என்றால் அதன் பொருள் என்ன?

'உணவே உன்னுடைய மருந்தாக இருக்கட்டும்' என்பது; நோயாளிகளை நோக்கிக் கூறப்பட்ட அறிவுரை. அதாவது, நமக்கு நோய் வந்தால், அந்த நோய்க் காலத்தில் நாம் உண்ணுகிற உணவுகளே நமக்கு மருந்தாக அமைய வேண்டும். அவ்வாறு மருந்தாக அமையக்கூடிய உணவுகளை மட்டுமே நாம் தேர்ந்து எடுத்து உண்ண வேண்டும். நமக்கு உணவாகப் பயன்பட இயலாத எதையுமே நாம் மருந்தாக உண்ணக் கூடாது! இதுதான் அந்த அறிவுரையின் கருத்து.

இப்போது நமது அல்லோபதி டாக்டர்கள் கொடுக்கிற எந்த ஒரு மருந்தாவது இந்த இலக்கணத்துக்குப் பொருந்துவதாக இருக்கிறதா? சாதாரண தலைவலிக்கு கொடுக்கிற மருந்தையும் காய்ச்சலுக்குக் கொடுக்கிற மருந்தையும் எடுத்துக் கொள்வோம். எனினும், இந்த மருந்துக்களை நம்முடைய பசி தீர்க்கும் உணவாகப் பயன்படுத்த முடியுமா?

'உணவாகப் பயன்படுத்த முடியாத எதையுமே மருந்தாகப் பயன்படுத்தாதே' என்பது ஹிப்போகிரேட்டஸின் கட்டளை. இயற்கை வைத்தியன் ஒருவன்தான் அந்தக் கட்டளையை இன்றளவும் தலைமேல் தாங்கிக் கடைப்பிடித்து வருகிறான். அல்லோபதி டாக்டர்கள் அதைக் காலின் கீழ் போட்டு மிதித்து வருகிறார்கள்!

அடுத்தபடியாக,

'மருந்தே உன்னுடைய உணவாக இருக்கட்டும்' என்றார் ஹிப்போகிரேட்டஸ். நோயின்றி வாழும் மக்களை நோக்கிக் கூறப்பட்ட அறிவுரை இது.

இப்போது நீ நோயின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறாய். இதேபோல் எதிர்காலத்திலும் நீ நோயின்றி வாழவேண்டுமானால், 'மருந்துபோல் உதவக்கூடிய உணவுகளையே நீ உட்கொள்ள வேண்டும்' - இதுதான் அந்த அறிவுரையின் கருத்து.

ஸாத்விக, இராஜஸ, தாமஸ உணவுகள்

மருந்துபோல் உதவக்கூடிய உணவுகள் என்றால், அவை யாவை?

கேழ்வரகு, கோதுமை, அவல், அரிசி, பாசிப்பயறு, அக்ரோட்டு, தேங்காய், வேர்க்கடலை, பாதாம் பருப்பு, பனை நுங்கு, பப்பாளி, பேரிக்காய், வால் பேரி, வாழைப்பழம், ஆல்பகோடா, அன்னாச்சிப்பழம், தக்காளிப்பழம், சப்போட்டா பழம், தர்பூஸ் பழம், ஆரஞ்சுப்பழம், நாரத்தம் பழம், பனம்பழம், பச்சைக்கொடி முந்திரிப்பழம், கறுப்புத் திராட்சைப்பழம், கடாரங்காய், கொடுக்காப்புளிப்பழம், மாம்பழம், மாதுளம்பழம், பம்பிளிமாஸ், பலாப்பழம், நாவல் பழம், அத்திப்பழம், பேரீச்சம்பழம், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய், பறங்கிக்காய், நெல்லிக்காய், அவரைக்காய், கொத்தவரைக்காய், வெள்ளரிக்காய், பீர்க்கங்காய், கொவ்வைக்காய், காரட்டு, புடலங்காய், வெண்டைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, சுரைக்காய், மணத்தக்காளி, பசலைக்கீரை, கையாந்தகரை, கறிவேப்பிலை, முட்டைக்கோஸ், நூக்கோல், முளைக்கீரை, அரைக்கீரை, இலந்தைப்பழம், விளைக்கீரை, விளாம்பழம்...

இவையும், இவை போன்ற இன்னும் பல காய்கனி கிழங்குகளும் மருந்துபோல் உதவக்கூடிய உணவுகள் ஆகும். அதாவது, இந்த உணவுகளை அளவு அறி

ந்து உண்பவர்கள், நோய்வாய்ப்படாமலே நெடுங்காலம் வாழ்ந்திருப்பார்கள். அதுமட்டும் அல்ல. இந்த உணவுகளை வழக்கமாக உண்பவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட்டுத் தம் நிதானத்தை இழந்து விடமாட்டார்கள். அவர்களுடைய அறிவு எப்போதும் தெளிவாகவும் கூர்மையாகவும் விளங்கிக் கொண்டிருக்கும். உள்ளத்தில் அமைதி நிலவும், உடம்பும் சுறுசுறுப்பாக இருக்கும். இத்தகைய உணவுகளுக்கு ஸாத்விக உணவுகள் என்று பெயர்.

'உணவு என்பது உடலை வளர்ப்பது. உள்ளத்தின் அமைதிக்கும், அறிவின் தெளிவுக்கும் உணவை எப்படிக் காரணமாக கூறமுடியும்? என்னும் ஓர் ஐயப்பாடு இங்கே சிலருக்கு எழக்கூடும்.

நாம் உண்ணும் உணவுகள் நம் உடலை மட்டும் அல்ல, உள்ளத்தையும் அறிவையும் கூடப் பாதிக்கின்றன என்பதற்கு, மது ஒன்றே போதுமான சான்றாகும். மதுவை அருந்துகிறவனுக்கு அவனுடைய உடலில் மட்டும்தான் கேடுகள் விளைகின்றன என்பது இல்லை. அவனுடைய உள்ளத்தில் வெறி ஏற்படுகிறது. அவனுடைய அறிவில் குழப்பம் ஏற்படுகிறது. அதனால் அவன் தன் நிதானத்தை இழந்து உளறுகிறான்! மதுவானது நம் உடலையும் உள்ளத்தையும் அறிவையும் உடனடியாகப் பாதிக்கிறது.

ஸாத்விகம் வகை உணவுகளைப் பற்றி பகவத்கீதை பின்வருமாறு கூறுகிறது:

'சாறு, பசை, உறுதி, சுவை இந்நான்கு குணங்களும் அமையப் பெற்றவை ஸாத்வீக உணவுகள், அவற்றை உண்பதால், ஆயுள் பெருகுகிறது. வலிமை வளர்கிறது. உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது. நோய்கள் நீங்குகின்றன. மனம் அமைதி அடைகிறது. ஊக்கம் பிறக்கிறது.

பகவத்கீதை வகுத்துக் கொடுத்துள்ள இந்த இலக்கணங்களைக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட உணவுப் பொருள் ஸாத்வீக வகையைச் சேர்ந்ததா என்பதை நாம் எளிதில் புரிந்து கொண்டுவிட முடியும். ஆனால், எல்லா விதிகளுக்கும் சில விலக்குகள் இருப்பதுபோல, இந்த இலக்கணங்களுக்கும் சில விலக்குகள் உண்டு. எடுத்துக்காட்டாக, எலுமிச்சம்பழம் புளிப்பானது இருந்தாலும் அது ஸாத்வீக உணவு.

இந்த ஸாத்வீக உணவுகளில் அப்படி என்னதான் இருக்கிறது?

முதல்தர உணவுகளும் இரண்டாந்தர உணவுகளும்

பொதுவாக, உணவுகளில் உள்ள முக்கியமான சத்துக்களைப் பாகுபடுத்திப் பேசுகிற இன்றைய விஞ்ஞானிகள்.

# புரதப் பொருள்கள் (Proteins)

# மாவுப் பொருள்கள் (Starches)

# சக்கரைப் பொருள்கள் (Sugars)

# கொழுப்புப் பொருள்கள் (Fats)

இந்த நால்வகைப் பொருள்களும் தாம் மனித உடலுக்கு இன்றியமையாதவை என்று சொல்லுகிறார்கள்.

அப்படியானால், ஸாத்வீக உணவுகளில் இந்த நால்வகைப் பொருள்களும் நிரம்ப இருக்கின்றனவா?

இல்லை.

இந்நால்வகைப் பொருள்களும் அல்லாத இன்னொரு பொருள் ஸாத்வீக உணவில் இருக்கிறது.

அதுதான் தாதுஉப்புகள் (Mineral salts) என்னும் பொருள். இளங்கீரை வகைகளிலும், புதிதாகப் பறித்த இளங்காய்கறிகளிலும், கனிகளிலும் தளிர்களிலும் இந்தத் தாது உப்புகள் நிரம்ப இருக்கின்றன. அதனாலேயே இயற்கை வைத்தியத்தில் அவற்றை முதல் தரமான உணவுகளாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தானியங்கள், பயறுகள், கிழங்குகள், பருப்புகள் ஆகியவற்றில் புரதப் பொருள்களும், மாவுப் பொருள்களும், சர்க்கரைப் பொருள்களும், கொழுப்புப் பொருள்களும் இருக்கின்றன. இயற்கை வைத்தியர்கள் இவற்றை இரண்டாந்தர உணவுகளாகக் கருதுகிறார்கள்.

இரண்டாந்தர உணவுகளும் உடம்புக்கு ஓரளவு இன்றியமையாதவைதாம். ஏனென்றால், உடம்பின் வளர்ச்சிக்கு புரதங்கள் தேவைப்படுகின்றன. உடம்பிற்குச் சக்தி அளிப்பதற்கு மாவுப்பொருள்களும் சர்க்கரை பொருள்களும் தேவைப்படுகின்றன. உடம்பிற்கு வெப்பத்தை அளிப்பதற்குக் கொழுப்புப் பொருள்கள் தேவைப்படுகின்றன. இந்த மூன்று தேவைகளையும் கருத்தில் கொண்டுதான், சில இரண்டாந்தர உணவுகளையும் ஸாத்வீக உணவுகளாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஸாத்வீக உணவுகளில் மிகப் பெரும்பான்மையாக காணப்படுபவை முதல்தர உணவுகளே ஆகும்.

இந்த முதல்தர உணவுகளில் உள்ள தாது உப்புகள் வேறு எந்த உணவுச் சத்துக்களிலிருந்தும் நாம் பெற முடியாத ஒரு பெரிய நன்மையை நமக்குச் செய்கின்றன. நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு அவைதாம் உதவி புரிகின்றன.

எப்படியென்றால்,

நமக்கு நோய்கள் எதனால் வருகின்றன?

நாம் அறிந்தோ அறியாமலோ செய்கிற தவறுகளினாலும், தவிர்க்க முடியாத சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் நம் உடம்பினுள்ளே நச்சுப் பொருள்களும் அழுக்குப் பொருள்களும் சேர்ந்துபோய் விடுகின்றன. அவ்வாறு பல நாள்களாகச் சேர்ந்து போயிருக்கும் கழிவுப் பொருள்களை ஒரு நாள் வெளியேற்ற முயற்சி செய்கிறது நம் பிராணசக்தி. பிராணசக்தியின் அந்த முயற்சியைத்தான் நாம் நோய் என்ற பெயரால் அழைக்கிறோம். இது நாம் ஏற்கெனவே நன்கு அறிந்த ஒரு செய்தி.

கழிவுப் பொருள்கள் பல நாள்களுக்குச் சேர்த்து வைக்கப்படாமல், நம் உடம்பிலிருந்து அவ்வப்போது வெளியேற்றப்பட்டு விடுவதாக வைத்துக் கொள்ளுவோம். அப்படியானால் நமக்கு எப்போதுமே எந்த நோயும் வரமாட்டாது என்று ஆகிறது அல்லவா?

நாம் உட்கொள்ளுகிற முதல்தர உணவுகளில் அடங்கியிருக்கும் இயற்கையான தாது உப்புகள், நம் உடம்பில் சேருகிற கழிவுப் பொருள

்களை அவ்வப்போது வெளியேற்றிவிடுவதற்கு உதவிபுரிகின்றன. அதாவது, நாம் என்றைக்குமே யாதொரு நோய் நொடிக்கும் ஆளாகாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு முதல்தர உணவுகள் துணைபுரிகின்றன.

அதனால்தான், அந்த முதல்தர உணவுகளையே பெரும்பான்மையாகக் கொண்டுள்ள ஸாத்வீக வகையைச் சேர்ந்த உணவுகளை, 'மருந்துபோல் உதவக் கூடிய உணவுகள்' என்று நாம் சொல்லுகிறோம்.

'மருந்தே உன்னுடைய உணவாக இருக்கட்டும்' என்று ஹிப்போகிரேட்டஸ் கூறியதுபோது, அவர் இத்தகைய உணவுகளைத்தாம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் ஊகிப்பது தவறு ஆகாது.

தாது உப்புகள் தாம் உடம்பைத் தூய்மைப்படுத்துகின்றன என்றால், அதற்காக நாம் கீரைகளையும் காய்கனிகளையும் தான் சாப்பிட வேண்டுமா? அதே தாது உப்புகளை நாம் செயற்கை முறையில் தயாரித்துச் சாப்பிடக் கூடாதா? என்று கேட்கப்படலாம்.

செயற்கை முறையில் ஏராளமான தாது உப்புகள் தயாரிக்கப்படுகின்றன. அல்லோபதி மருந்துகளில் அந்த உப்புகளையெல்லாம் பயன்படுத்துகிறார்கள். நாம் சமையலுக்குப் பயன்படுத்துகிற சாதாரண உப்புக் கூட ஒரு செயற்கை உப்புத்தான். ஆனால் இந்தச் செயற்கை உப்புகளுக்கு நம் உடம்பைத் தூய்மைப்படுத்தும் சக்தி கிடையாது. கீரை காய் கனிகளில் உள்ள இயற்கை உப்புகளுக்குத்தாம் அந்தச் சக்தி உண்டு.

அந்தக் கீரை காய்கனிகளும்கூட அவற்றைத் தண்ணீரில் வேக வைப்பதாலும், எண்ணெயில் வதக்குவதாலும் மிளகாய் ஊறுகாய் போடுவதாலும், தம் இயல்பான உப்புச் சத்துக்களை இழந்து விடுகின்றன.

செடியிலிருந்து பறித்தபடியே பச்சையாகச் சாப்பிடும் போதுதான், அவற்றில் உள்ள இயற்கையான தாது உப்புகளின் பயனை நாம் முழுமையாக அடைய முடியும்...

நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கட்டும்!

நன்றி!
வாழ்க வளமுடன் 🙏

5 years ago | [YT] | 12