Intell Times - தமிழ்

நீதித்துறையில் டிஜிட்டலிசம் என்பது மனித தன்மையை நீக்கும் வன்முறை.

அந்த மொத்த குடும்பமும் அன்று திருநெல்வேலி நீதிமன்ற வாசலின் முன்பாக காத்து கிடந்தது.

அவனுடைய மனைவி, 5 வயது மகன், தந்தை, தாய், அண்டை வீட்டார் என 12 பேர்.

அவனை ஒரு பொய் வழக்கில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்திருந்தது போலீஸ்.

15 நாட்களுக்கு ஒருமுறை, விசாரணை கைதிகளை கொண்டு வந்து மாஜிஸ்ட்ரேட் முன்பாக ஆஜர் படுத்துவது கட்டாயம்.

அவனை சிறையில் அடைத்து 15 நாட்கள் ஆகிவிட்டப்படியால், அவனை நீதிமன்றம் அழைத்து வருவார்கள், கண்ணால் கண்டுவிடலாம் எனும் ஆசையில் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் வாசலில் காலை 10 மணியில் இருந்தே தவம் இருக்க தொடங்கினர் அந்த குடும்பத்தினர்.

நேரம் சென்று கொண்டே இருந்தது. 10.30 மணி, மாஜிஸ்ட்ரேட் வந்தார், நீதிமன்ற நடவடிக்கைகள் துவங்கின. ஆனால் அவன் அழைத்து வரப்பட வில்லை.

அவன் மனைவி அந்த வக்கீலின் முகத்தையும் நீதிமன்ற நுழைவாயிலையும் மாறி மாறி பார்த்து கொண்டே இருந்தாள்.

நேரம் 11 மணி ஆகிவிட்டது. அந்த சிறுவன் தனது தந்தையை எங்கே, எப்போது வருவார் என தனது தாயிடமும் தாத்தாவிடமும் மாறி மாறி கேட்டு கொண்டிருந்தான்.

அவள் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டாள். மெதுவாக நீதிமன்றத்தின் வாசலில் நுழைந்தும் நுழையாமலும் நின்று கொண்டு அவர்களுடைய வக்கீலை தேடினாள்.

ஒரு புள்ளியில், அவளது பார்வையும், வக்கீலின் பார்வையும் சந்தித்து கொண்டன. அவள் எதும் கேட்கவில்லை, அவர் அந்த பார்வையை படித்து விட்டு, அவசரமாக வெளியே வந்தார்

"எப்படியும் 12 மணி ஆயிடும், கண்டிப்பா கூட்டிட்டு வருவாங்க, வெயிட் பண்ணுங்க"

அவள் காதில் சொல்லிவிட்டு மீண்டும் நீதிமன்றத்திற்குள் நுழைந்து அங்கிருந்த கருப்பு கவுன்களுக்கு மத்தியில் தொலைந்து போனார்.

கைது செய்யப்பட்ட பிறகு, 2வது நாள் ஒரே ஒருமுறை தனது மாமனாருடன் சென்று அவனை சிறையில் சந்தித்தாள். பிறகு மாமனார் மட்டும் சிறைச்சாலை சென்று மகனை பார்த்து வந்து கதை சொல்வார்.

அவள் அந்த நீதிமன்ற நுழைவாயிலையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். பக்கத்தில் தனது மகன் பேசுவதையோ கேட்பதையோ கவனிக்க அவள் மனம் மறுத்துவிட்டது.

மனம், சிந்தனை, எண்ணம் எல்லாவற்றிலும் தனது கணவனையே ஏந்தி கொண்டு நின்றிருந்தாள்.

12 மணி ஆகிவிட்டது, போலீஸ்காரர்கள் கையில் நீண்ட துப்பாக்கியை வைத்து கொண்டு கைதிகளை அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

அவள் பார்வை, அந்த நுழைவுவாயிலில் நிலைகுத்தி நின்று கொண்டிருந்தது. கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

1மணி. இல்லை, அவன் வரவில்லை. அதற்குள் தனது மற்ற நீதிமன்ற அலுவல்களை முடித்துவிட்டு அந்த வக்கீல் வந்தார்.

இவள் ஓடோடி போய் அவர் முன்னால் நின்றாள். இப்போதும் அவள் ஒரு வார்த்தை பேசவில்லை.

"ராஜாவை கூட்டிட்டு வரலயாம், வீடியோ கான்பரன்சிங்ல அப்பியரன்ஸ் காட்டிட்டாங்கலாம்"

என சொல்லிவிட்டு தலையை கவிழ்ந்து கொண்டார்.

------------------------------

மனித வரலாறு, 4வது தொழில் புரட்சியை நோக்கி நான்கு கால் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது.

AI எனப்படும் இயந்திர-சிந்தனை (Artificial intelligence) இந்த நான்காவது தொழில் புரட்சியின் மூலமாகவும் (Core) அதே சமயத்தில் இரண்டு கால் மனிதர்களுக்கான உலகினை நான்கு கால் பாய்ச்சலில் அசுர வேகத்தில் ஓட செய்வதாகவும் உள்ளது. இதனை டிஜிட்டலைசிங் என்று கூறுகிறார்கள்.

அறிவியல், தொழில்நுட்பம், வேகம், வளர்ச்சி ஆகியவை மனிதனை மேம்படுத்தவில்லை என்று கூறினால் நிச்சயமாக அது ஏற்று கொள்ளப்பட கூடியது கிடையாது.

ஆனால் அதே சமயத்தில் பாகுபாடற்று எல்லா துறைகளிலும் வேகம் வேண்டுமென்று எதிர்பார்ப்பதும் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாகும். அதிலும் குறிப்பாக நீதித்துறை (Judiciary).

நீதித்துறைக்கு வெளியில் இருப்பவர்கள் இந்திய நீதி பரிபாலன முறை கேலி, கிண்டல் செய்து, வழக்குகள் மிக தாமதமாக தீர்க்கப்படுவதாக குறைப்பட்டு கொள்கின்றனர்.

ஆனால், இந்திய சமூகத்தையும் அதன் சாதி, மத, வர்க்க வேறுபாடுகளையும் அவை சமூகத்திலும் வழக்குகளை தீர்ப்பதிலும் செலுத்தும் தாக்கத்தையும் புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இந்த தேசத்திற்கான ideal system இது தான் புரிந்து கொள்ள முடியும்.

நீதித்துறையில் முன்பு E-Court வந்தது, நல்ல முயற்சி, வழக்கறிஞர்களுக்கு பல விதங்களிலும், வழக்காடிகளுக்கு தங்கள் வழக்கை தாங்களே Track செய்து, நீதிமன்றத்தில் நடப்பதை அறிந்து கொள்ளவும் உதவ கூடியதாக இருக்கிறது.

தற்போது, E-filing முறையை நடைமுறைப்படுத்த அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. கிரிமினல் வழக்குகள், செக் மோசடி மற்றும் விபத்து இழப்பீடு வழக்குகளில் இது நடைமுறைக்கும் வந்துவிட்டது.

E-filing ஆரம்பத்தில் சிரமமான ஒன்றாக இருந்தாலும், சிறிது காலத்திற்கு பின்பாக வழக்கறிஞர்களின் வேலையை எளிமைப்படுத்த கூடியதாகவும், Processing time எனப்படும் கையாளும் கால நேரத்தையும் வேலையையும் குறைத்து துரிதமான நேரத்தில் வழக்குகளை கையாளவும் வழிவகுக்கும்.

இது மாதிரியான டிஜிட்டலைசிங் நடவடிக்கைகள் பல்வேறு நன்மைகளை நமக்கு அளித்தாலும் கைதிகளை சிறையில் இருந்தே வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜர் படுத்துவது என்பது டிஜிட்டலைசிங் உடைய ஏற்று கொள்ளமுடியாத கொடூர முகம் ஆகும்.

கைதிகளும் மனிதர்கள் தான் என்பதையும், மனிதர்களின் தீய செயலைதான் வெறுக்க வேண்டுமே தவிர அந்த மனிதனையே வெறுத்து ஒதுக்குவது மனித சமூகத்திற்கே கேடாக அமையும் என்பதையும் நாம் புரிய வேண்டும்.

ஒரு கைதியை, நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து மாஜிஸ்ட்ரேட் முன்பு காட்டுவது என்பது மற்றவர்களுக்கு ஒரு சாதாரண சட்ட நடைமுறையாக தான் தெரியும்.

ஆனால், பொய் வழக்கில் சிறை சென்ற ஒருவனுக்கும், அவனுடைய குடும்பத்தினருக்கும் தான் தெரியும் அந்த சில மணி துளிகள் அவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆறுதல் அளிக்கின்றன என்று.

வெளி உலகை காண அனுமதி மறுக்கப்பட்டு தொடர்ந்து நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருக்க கட்டாயபபடுத்த பட்ட ஒருவனுக்கு வெளி உலகை காணும் ஒரே ஒரு வாய்ப்பு இது ஒன்று தான்.

அந்த சமயத்தில் அவன் தனது குடும்பத்தை பார்ப்பதும், வெளி உலக மக்களை பார்ப்பதும் அவனை பெரிதும் ஆசுவாசப்படுத்தும் உளவியல் காரணிகள் ஆகும்.

ஆனால் இன்றைய டிஜிட்டலைசிங் தொழில்நுட்பம், எல்லாவற்றையும் இலகுவாக்குவதாக கூறி கொண்டு இதிலும் வீடியோ கான்பரன்சிங் முறையை கொண்டு வந்திருப்பது உள்ளப்படியே நீதித்துறையை மனித உணர்வுகளற்ற இயந்திர தனமான நீதி பரிபாலனம் செய்யும் நிலைக்கு இட்டு சென்றுவிடும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

கைதியின் உயிருக்கு ஆபத்து இருக்கும் நிலையில், கைதியே கேட்டால் ஒழிய கைதிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கூடாது.

சிறுசிறு உணர்வுகளால் ஆனவன்தான் மனிதன். மனிதம் போற்றுவோம். மனித உரிமைகளை பாதுகாப்போம்.

சிந்தனையும் எழுத்தும்
மு.அகமது இஸ்மாயீல்.BSc.MBA.LLB
அட்வகேட்
திருநெல்வேலி.
8124499188

1 year ago (edited) | [YT] | 3