AADHIRA

✨✨✨✨✨ *மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்-நவராத்திரி திருவிழா*-2025-5ம்நாள்-27.09.2025 *இரசவாதம் செய்த படலம்*

Madhurai Sri Meenakshi Sundareswarar temple💢Navarathiri festival 2025-Day-5-Evening💢
✨✨✨✨✨
*இரசவாதம் செய்த படலம்*

திருப்பூவணத்தில் பொன்னனையாள் என்ற சிவபக்தை இருந்தாள். இவள் சிறந்த நடன மாது. நாட்டிய இலக்கணப்படித் தினமும் இறைவன் முன் நடனமாடுவது இவளது வழக்கம். தனக்குக் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் அன்னதானத்திற்குச் செலவு செய்தாள். தினமும் சிவனடியார் பலரும் வந்து உணவருந்திச் செல்வதைக் கண்டு மகிழ்ந்தாள்.

*திருத்தர் பூவண வாணரைச் சேவித்துச் சுத்த
நிருத்த மாடிவந் தடியரைப் பொருளென நினையுங்
கருத்த ளாயருச் சித்தவர் களிப்பவின் சுவையூண்
அருத்தி யெஞ்சிய தருந்துவா ளமஃதவ ணியமம்!

அப்படியிருக்கையில் அவளுக்குத் திருப்பூவணம் கோயிலில் வைத்துப் பூசிப்பதற்கு இறைவனின் திருமேனியைத் தங்கத்தில் செய்து கொடுக்க வேண்டும் என்று பேராவல் பூவணநாதரின் அருளாசியினால் உண்டானது. ஆனால் கிடைக்கும் பொருள் எல்லாம் அன்னதானத்திற்கே செலவானது. தங்கத்திற்கு எங்கே போவது. குலபூடண பாண்டியனுக்கு எடுக்க எடுக்கக் குறையாத பொற்கிழியை வழங்கிய மதுரை சோமசுந்தரக் கடவுளை மனதில் நினைந்து வேண்டினாள்
பக்தையின் விருப்பத்தை அறிந்த மதுரை சோமசுந்தரப் பெருமான். அதனைப் பூர்த்தி செய்ய திருவுள்ளம்கொண்டு சித்தர் வடிவில் திருப்பூவணத்தில். பொன்னனையாள் வீட்டிற்கு எழுந்தருளினார்.

அங்கு, அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, தாதியர்கள் உணவு உண்ண வாருங்கள் எனச் சித்தரையும் அழைத்தனர், அதற்கு சித்தர் பெருமான். உங்களது தலைவியை இங்கே அழையுங்கள் எனக் கூறினார், பொன்னனையாள் வந்தாள். சித்தரது பாதங்களில் தனது தலை பதியுமாறு பணிந்து உணவு உண்ண அழைத்தாள், அதற்குச் சித்தர். உனது முகம் வாட்டத்துடன் காணப்படுகின்றதே! உனது மனக் கவலைதான் என்ன? என்று கேட்டார், பொன்னனையாளும், எங்கள் தலைவனாம் திருப்பூவணத்து இறைவனது திருவுருவினைச் செய்வதற்கு உள்ளத்தில் பெருவிருப்பம் கொண்டு மெழுகினால் கருக்கட்டி வைத்துள்ளேன், அதனைப் பொன்னினால் செய்து முடிக்கக் கருதிய எனக்கு நாள்தோறும் கையில் வரும் பொருள் முழுவதும் அடியார்களுக்கு அன்னம் இடுவதிலேயே செலவாகி விடுகின்றது, நான் என்ன செய்வேன்? என்று தனது கவலையை கூறினாள், அதற்குச் சித்தரும். நீ தானத்துள் சிறந்த அன்னதானத்தை நாள்தோறும் செய்து வருகின்றாய், உன் பெயருக்கு ஏற்றவாறு அழிவில்லாத இறைவனின் திருவுருவத்தைத் தங்கத்தினால் செய்யப் பெறுவாயாக என வாழ்த்தினார்

அனைத்து உலோகப் பாத்திரங்களையும் கொண்டு வரச்செய்து. திருநீற்றினைத் தூவினார், இவற்றைத் தீயிலிட்டுக் காய்ச்சுங்கள் தங்கம் கிடைக்குமெனக் கூறி அருளினார், பொன்னனையாள் அச்சித்தர் சுவாமியை வணங்கி இன்றைய இரவு இங்கேயே தங்கித் திருவமுது செய்து இரசவாதம் செய்து முடித்தபின்னர் அதிகாலை எழுந்து செல்லலாம் என வேண்டினாள், மீனாட்சி அம்மையைப் பிரியாத சோமசுந்தரரே சித்தர் வடிவில் வந்துள்ளதால் அவர் யாம் மதுரையில் விளங்கும் சித்தராவோம் எனக் கூறி மறைந்தார், சித்தர் கூறிய சொற்களும். மறைந்தருளிய தன்மையையும் கண்ட பொன்னனையாள். வந்தவர் மதுரை வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடியருளும் அம்பலவாணரே எனக் கண்டு பக்தியால் நெகிழ்ந்து. தனது கவலையை இறைவனே நேரில் வந்து நீக்கினார் எனக் களிப்புற்றவளாகிச் சித்தர் கூறியபடியே செய்ய உலோகப் பாத்திரங்களைத் தீயிலிட்டுப் புடம் செய்தனள், ஆணவமலம் கெட்டு இறைவனின் திருவடியை அடைந்தவர் சிவமாக விளங்குதல் போல உலோகங்களின் களிம்பு நீங்கிப் பொன்னாக மாறின, அப்பொன்னைக் கொண்டு இறைவனுக்குத் திருவுருவம் வார்ப்பித்தாள்!

✨✨✨✨✨✨ 🌙சொக்கே⭐ நின் தாளே துணை!

3 days ago | [YT] | 297