என் தமிழ்நாடு

ஜிஎஸ்டி குறைப்பா?
ஒன்றிய அரசின் சூழ்ச்சியா?
ஒன்றிய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள ஜிஎஸ்டி வரிக் குறைப்புச் செய்தி, மக்களுக்கு நிம்மதி அளிக்கும் முடிவு அல்ல. மாறாக, மக்களை ஏமாற்றுவதாகவே கருதமுடியும்.
கடந்த எட்டு வருடங்களாக, ஜிஎஸ்டி என்ற பெயரில், மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டே வந்துள்ளது ஒன்றிய அரசு. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், எதிலும் கூடுதல் சுமைத் திணிக்கப்பட்டது. இதன் விளைவாக, சாதாரண மக்களின் குடும்பச் செலவுகள் வானளவு அதிகமாகின. சிறு வியாபாரிகள், சுய தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் எவரும், இந்த ஜிஎஸ்டி சுமையிலிருந்துத் தப்பவில்லை.
இப்போது சில சதவீதம் வரியைக் குறைத்துக் கொண்டு, “மக்களுக்கான நிவாரணம்” என விளம்பரம் செய்வது, தீ வைத்த இடத்தில், சிறிதளவு தண்ணீர் தெளித்து “நாங்கள் காப்பாற்றிவிட்டோம்” எனக் கூறுவது போன்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கேள்விகள் தெளிவானவை.
கடந்த எட்டு ஆண்டுகளாக மக்களிடம் இருந்து வசூலித்த அதிகப்படியான ஜிஎஸ்டி தொகையைத் திரும்பக் கொடுக்குமா, ஒன்றிய அரசு?
மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் அத்தியாவசியப் பொருட்களிலிருந்து, ஏன் ஜிஎஸ்டியை முழுமையாக நீக்கக் கூடாது?
ஜிஎஸ்டி நடைமுறையில் வந்த பின், மாநில அரசுகளின் நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன. வருவாய் ஈட்டும் அதிகாரம் மாநிலங்களிடம் இருந்துப் பறிக்கப்பட்டு, ஒன்றிய அரசின் கையில் சுருண்டு விட்டது. மாநில நலனைக் குறைக்கும் இந்த ஆதிக்கச் சட்டத்தை, ஒன்றிய அரசிற்குத் திருத்தக்கூடியத் துணிவு உண்டா?
ஜிஎஸ்டி குறைப்பு என்பது, ஒரு அரசியல் நாடகம். தேர்தல்களை முன்னிட்டு மக்களை மயக்கவே, இதுபோன்ற அறிவிப்புகள் வெளிவருகின்றன. ஆனால் உண்மையில் மக்கள் சந்திக்கும் துயரங்கள், குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள், வியாபாரிகள் அனுபவிக்கும் வீழ்ச்சிகள், இவையெல்லாம் ஒன்றிய அரசின் கொடூரமான வரிக் கொள்கையின் நேரடி விளைவுகளே. மக்களை ஏமாற்றும் இந்தப் போலியான ஜிஎஸ்டி குறைப்பு நாடகத்தைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கையுடன் கண்டிக்கிறது.
அதே வேளையில்,
மக்களின் வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசியமானப் பொருட்களுக்கு எந்தச் சூழலிலும் ஜிஎஸ்டி விதிக்கக் கூடாது என்றும்,
மாநிலங்களின் நிதி உரிமை, மீண்டும் மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும்,
கடந்த எட்டு ஆண்டுகளில் மக்கள் மீது திணிக்கப்பட்ட அநியாய வரிச் சுமைகளுக்காக, மக்கள் முன் ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

2 months ago | [YT] | 1