இறை இயேசுவிலும் அவரைப் பெற்றுத்தந்த மரியிலும் பிரியமானவர்களே!
மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் இந்திய நாட்டின் விடுதலைப் பெருவிழா வாழ்த்துக்கள்!
பழைய ஏற்பாட்டில் கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ்ந்த இறைவாக்கினர் எலியா, ஏனோக் ஆகியோர் கடவுளால் உயிரோடு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவ்வுலகில் மரியன்னை வாழ்ந்த சிறப்பான வாழ்வுக்கு பரிசு கொடுக்க நினைத்த கடவுள் அவருடைய உடலை அழியாமல் விண்ணகத்திற்கு எடுத்துக் கொண்டார். ஏனென்றால் மரியன்னையின் உடல் பிறக்கும்போதே தூயதாய், சென்ம பாவ மாசு ஏதுமின்றி இருந்தது. பிறந்த பின்பும் அன்னை தன் உடலை கறைபடாமல் காப்பாற்றினார். இந்தப் புனித உடலில் உலகத்தை மீட்க இறைவனால் அனுப்பப்பட்ட திருமகன் தங்கியிருக்க சம்மதம் தெரிவித்தார். இறைவனை தன் திருஉதிரத்தில் தாஙகும் பேறு பெற்ற அன்னை மரியாளின் திருவுடல் அழிய இறைவன் விரும்புவாரா?
அன்னையின் இவ்வுலக வாழ்வுப் பயணம் நிறைவு பெற்றதும் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மாட்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். அங்கு அவர் அரசியாக இறைவனால் உயர்த்தப்பெற்றார். இதையே நாம் ஆகஸ்ட் 22ஆம் நாள் மரியன்னை விண்ணக அரசி என்று கொண்டாடுகிறோம்.